×

10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் 79.60 சதவீதம் தேர்ச்சி: ரங்கராஜபுரம் மற்றும் ஆயிரம் விளக்கு பள்ளி முதலிடம்

சென்னை, மே 20: தமிழ்நாட்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் 79.60 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2022-23ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 3,538 மாணவர்கள், 3,375 மாணவியர்கள் என மொத்தம் 6,913 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 2,622 மாணவர்கள், 2,881 மாணவியர்கள் என மொத்தம் 5,503 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 79.60 ஆகும். (கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 76.10 சதவீதம்) பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணிதத்தில் 2 மாணவியரும், அறிவியலில் ஒரு மாணவியும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், 12 மாணவர்கள் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மதிப்பெண்கள் அடிப்படையில் 50 மாணவ, மாணவியர்கள் 451க்கு மேல் மதிப்பெண்களும், 305 மாணவ. மாணவியர்கள் 401லிருந்து 450 வரை மதிப்பெண்களும், 704 மாணவ, மாணவியர்கள் 351லிருந்து 400 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் புல்லா அவென்யூ, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மார்க்கெட் தெரு மற்றும் பந்தர் கார்டன் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 475 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், கோயம்பேடு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 474 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், மடுவின்கரை சென்னை மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 473 மதிப்பெண்கள் பெற்று 4ம் இடத்தையும், வேளச்சேரி சென்னை மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 472 மதிப்பெண்கள் பெற்று 5ம் இடத்தையும் பெற்றுள்ளன. தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் ரங்கராஜபுரம் மற்றும் ஆயிரம் விளக்கு சென்னை உயர்நிலைப்பள்ளிகள் 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், கொடுங்கையூர் சென்னை உயர்நிலைப்பள்ளி 98.04 சதவீதத்துடன் 2ம் இடத்தையும், நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.92 சதவீதத்துடன் 3ம் இடத்தையும், வண்ணாரப்பேட்டை சென்னை உருது ஆண்கள் உயர்நிலைப்பள்ளி 97.44 சதவீதத்துடன் 4ம் இடத்தையும், குக்ஸ் சாலை சென்னை உயர்நிலைப்பள்ளி 97.30 சதவீதத்துடன் 5ம் இடத்தையும் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் 79.60 சதவீதம் தேர்ச்சி: ரங்கராஜபுரம் மற்றும் ஆயிரம் விளக்கு பள்ளி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Municipal Schools ,Rangarajapuram ,Thousand Lighting School ,Chennai, ,Chennai Municipal School ,Government ,Tamil Nadu ,Public Schools ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...